Tuesday 21 December 2010

** இப்படியும் நடக்கிறது இங்கிலாந்தில் …

நிலா காயுது நேரம் நல்ல நேரம்…உண்மைச் சம்பவம் சிறுகதையாக…

அது ஒரு சாம்பலான மதிய நேரம்..

ஒரு புலம் பெயர் தமிழர் நடந்து போகிறார்.. வேறெங்கே வங்கியை நோக்கித்தான். பின்புறத் தலையில் முடி கொட்டி நிலாக்காய்கிறது..

அதையே கூர்ந்து பார்க்கிறாள் வெள்ளைக்கார திருடி ஒருத்தி… நேரம் நல்ல நேரமென அவள் வாய் முணுமுணுக்கிறது..

நான்கு புறமும் தலையைச் சுழற்றி ஒளி வீசிவிட்டு, வங்கியில் பணமெடுக்கும் தானியங்கியில் வீஸா அட்டையை திணிக்கிறார் தமிழர்..

அவர் தலைக்குள் திணித்து வைத்திருக்கும் பணப்பிரச்சனைகளை சுமக்க முடியாத வலியோடு வீஸா அட்டை கொடிகாமத் தேங்காய் சுமந்த தட்டி வான்போல தள்ளாடியபடி உள்ளே நுழைகிறது..

கீக்.. கீக்… கீக்… கீக்… தனது வங்கி அட்டையின் நான்கு இரகசிய எண்களை அழுத்துகிறார்..

இனி தானயங்கி இயந்திரம் எவ்வளவு பணம் வேண்டுமெனக் கேட்கப்போகிறது..

இதுதான் தருணம்..

மின்னல் வேகத்தில் பாயந்து வருகிறாள் திருடி..

சடசடவென தமிழரிடம் ஆங்கிலத்தில் ஏதோ கூறி, தானியங்கி இயந்திரத்தில் பிழை இருக்கிறது உடனடியாக வங்கிக்குள் சென்று யாரோ ஒருத்தியை அழைத்துவா.. எனது வங்கி அட்டையும் உள்ளே போய்விட்டது என்று கூறி அவரை விரட்டுகிறாள்..

தமிழர் அவளைப் பார்த்துச் சிரிக்கிறார்..

அடடா எவ்வளவு அக்கறை… தங்க மலரே உள்ளமே தழுவி ஓடும் வெள்ளமே…

மற்றத் தமிழர்கள் ஏதாவது கேட்டால் சிங்கமாகச் சீறி அறுபத்து நான்கு கேள்விகளைக் கேட்கும் அந்தத் தமிழர் திருட்டு வெள்ளைக்காரியிடம் எதையுமே கேட்காது வங்கிக்குள் ஓடுகிறார்…

அவ்வளவுதான்… 300 பவுண்சை அடித்து எடுத்துக் கொண்டு வங்கி அட்டையுடன் பெண்மணி மாயமாகிவிட்டாள்..

நீயுமா… வங்கி ஊழியர்கள் சிரித்தார்கள்…

தலையை மூடியபடி பணத்தைத் திருடிய அந்த ருமேனிய பெண்மணியை வங்கி ஊழியர்கள் அறிந்திருந்தனர்… ஆனால் கமேராவில் அவளுடைய முகம் இதுவரை பதிவாகவில்லை…காத்திருந்தார்கள்..

ஆனாலும் என்ன.. தமிழர் தலையில் 300 பவுண்ஸ் துண்டு விழுந்தது விழுந்ததுதான்..

சம்பவம் இரண்டு…

இன்னொரு நாள் அதே தமிழர் மரக்கறிக் கடையொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்..

கோட் சூட்போட்டு டை அணிந்து சன் கிளாஸ் மினுமினுக்க டிப் டாப்பாக ஒரு வெள்ளையன் வந்தான்..

இவருடைய தலையை அவனும் பார்த்தானோ என்னவோ நிலாக்காயுதே நேரம் நல்ல நேரம்…

காருக்குள் சாவியை வைத்து கதவை மூடிவிட்டதாகவும், அடுத்த சாவி வீட்டில் இருப்பதாகவும் கூறிய அவன் பத்து பவுண்ஸ்கள் கொடுத்தால் உடனடியாக பஸ்சில் ஏறி வீடு போய் சாவியை எடுத்து வந்துவிடுவேன் அத்தோடு தங்கள் பத்து பவுண்சையும் கொடுத்து விடுவேன் என்றான்..

தமிழருக்கு நம்பிக்கை கொடுக்க தன்னுடைய கைத்தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தான்..

அவ்வளவு போதும் அவனிடம் பத்துப் பவுண்ஸ்களை கொடுத்து அனுப்பினார்..

தமிழர்களின் குழைவும் சிரிப்பும் தனக்கு மிக விருப்பம் என்று கூறினான் அவன்..

அவ்வளவுடன் நின்றானா..

இஸ்ரேலியருக்கு அடுத்தபடியாக ஈழத்தமிழரே உலகில் அறிவாளிகள் என்ற இரகசியத்தையும் ஓர் ஊது ஊதினான்..

தமிழரின் தோள்கள் தினவெடுத்தன.. வாளும் வேலும் இரத்த ருசி பார்க்கத் துடிதுடித்தன.. சிறகிருந்தால் புதுமாத்தளனுக்கே போய் புதிதாகப் போரை ஆரம்பித்திருக்கக் கூடிய ரென்சன் உலுப்பியது..

கடும் ரென்சன் சிறிது நேரத்தில் பசியைக் கிளப்பியது..

காலைச் சாப்பாடு சாப்பிடாமல் மிச்சம் பிடித்து, மத்தியானச் சாப்பாட்டுக்குக் கொண்டுவந்த பத்துப் பவுண்ஸ் போய்விட்டது அது வர சாப்பிடலாமெனக் காத்திருந்தார்..

நேரம் ஆக.. ஆக.. பசி வயிற்றைக் குடைந்தது..
அவன்; வரவில்லை..

அவன் கொடுத்துப்போன தொலைபேசி இலக்கத்தை அழுத்தினார்

அப்படியொரு இலக்கமே இல்லை என்பதை அறிந்து கொண்டபோதுதான் அவருக்கு தலை சுற்றியது..

எல்லாக் கடைகளிலும் பத்துப்பத்து பவுண்சாக கறந்து கொண்டு போய்விட்ட அந்த ருமேனியனின் முகம் அவருடைய கண்களில் மின்னியது..

அட இஸ்ரேலியனும் இப்படித்தானா என்ற கேள்வியும் சாக்குத் தைக்கும் ஊசிபோல அவரை கத்தியது..

பத்துப்பவுண்ஸ் அம்போ…

சம்பவம் மூன்று..

இப்படியாக இரண்டு தடவைகள் ஏமார்ந்து 310 பவுண்ஸ்களை கோட்டைவிட்ட அவர் இனியாவது ஊஜாராக இருக்க வேண்டுமென எண்ணியபடி காரில் போய்க் கொண்டிருந்தார்..

அதே கண்கள்.. அதே முகம்….

அவளேதான்…

கூர்ந்து பார்த்தார் வங்கியில் 300 பவுண்ஸ்சை சூறையாடிய திருட்டுக்கிறுக்கிதான் அவள்..

மடக்கிப் பிடிக்கலாமா என்று பார்த்தார்… பக்கத்தில் ஒரு டிப் டாப் ஆண்…
யார் அவன்.. அவனையும் கூர்ந்து பார்த்தார்…

சந்தேகமே இல்லை.. பத்துப்பவுணஸ் திருடிய பேர்வழிதான் அவன்..
கணவன் – மனைவியாக கைகோர்த்துப் போகிறார்கள்…

இருவரையும் ஒன்றாக மடக்கி தமிழன் வீரத்தைக் காட்டிவிட முடிவு செய்தார்.. காரை அப்படியே ஓரமாக ஒதுக்கினார்..

காரை விட்டுவிட்டுப்போனால் பாக்கிங் தண்டம் கட்ட வேண்டி வரும்.. அதனால் ஸ்ராட்டிலேயே நிறுத்தி விளக்குகளை இரண்டு பக்கங்களிலும் மின்னலடிக்க விட்டபடியே.. எகிறிப்பாய்ந்து ஓடினார்…

வழிவிடு வழிவிடு வீதிக்கு வந்துவிட்டான் வீரபாண்டிய கட்ட பொம்மன்…
ஓடாத வேகத்தில் பிடரி சிலிர்க்க ஓடினார்…

நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்…

அவருடைய பின்புற வெண் மண்டையை அவள் பார்த்துவிட்டாள்… இருவரும் அருகில் இருந்த ஓடைக்குள் புகுந்து மறைந்துவிட்டார்கள்…

நாலு மாத்திரை போட்டாலும் அடங்க முடியாத இரத்தக் கொதிப்புடன் திசை திக்கின்றித் தேடி ஓடினார்… பத்து நிமிடங்கள் கரைந்தன..

ஓடி மறைந்துவிட்டார்கள் இருவரும்..
இப்போதுதான் காரை ஸ்ராட்டிலேயே விடடிருப்பது நினைவுக்கு வந்தது..
காரை எடுக்க வேகமாக ஓடினார்…

காண்பது கனவா நிஜமா… கண்களை அழுத்தித் துடைத்தார்… தலையைச் சுற்றி மின்னல்கள் சுழன்றன..

என்ன ஆச்சரியம் அங்கே காரைக் காணவில்லை..
காரையும் சுட்டுட்டான்ரா….

தமிழருக்கு தலை மறுபடியும் சுற்ற ஆரம்பித்தது..
வீதியோரமாக அப்படியே உட்கார்ந்துவிட்டார்…

காரைத் திருடியது யார் ? அவனும் அவளுமா.. இல்லை வேறு யாருமா ? நிலத்தில் இருந்தபடியே அலப்பாரித்தார்..

அதோ வீதியில் சிகப்பு நிற ரொயோற்றா கார் ஒன்று போகிறது..
தன்னுடையதா என்று பார்க்க துடித்து எழுந்து ஒடுகிறார்…
ஓடினார் ஓடினார் ஓடிக்கொண்டே போனார்…